பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது - மத்திய அரசு உத்தரவு

தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது - மத்திய அரசு உத்தரவு
Published on

சண்டிகர்,

இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்தவகையில் இந்திய கொடி குறியீடு-2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:-

முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகளுக்குப்பின் இந்த கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது. தேசியக்கொடிக்கு உரிய கண்ணியத்துடன் தனிப்பட்ட முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பேப்பரில் செய்யப்பட்ட கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கொடிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இவை காகித கொடிகள் போல விரைவில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல. மேலும் நீண்ட காலத்துக்கு சிதைவடையாது. அத்துடன் இந்த தேசியக்கொடிக்கான கண்ணியத்துடன் இவற்றை அப்புறப்படுத்துவதும் நடைமுறை சிக்கலாகும். பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதைப்போல தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com