'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
Published on

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை 'நேஷனல் ஹெரால்டு' ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு நிறுவனமான 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும், அவரது மகன் ராகுல் காந்தியையும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை 'யங் இந்தியா' அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் 'யங் இந்தியா' நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லி, மும்பை, லக்னோ உள்பட பல நகரங்களில் இருக்கும் ரூ.661.69 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த ரூ.90.21 கோடி வருவாயும் 'யங் இந்தியா' வசம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து ரூ.751.9 கோடி மதிப்பிலான அந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com