தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. #NationalMedicalCommissionBill
தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது
Published on

புதுடெல்லி,

மருத்துவக் கல்வி தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். உறுப்பினர்களை மத்திய மந்திரி சபை செயலாளர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். இந்த ஆணையத்தை அமைக்க வகை செய்யும் மசோதாவை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவத்தில் ஈடுபடுபவர்களும் 6 மாத அடிப்படை பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு ஆங்கில மருத்துவ முறை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்

இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறினால் மருத்துவ துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாகும் என்றும் நவீன முறை மருத்துவத்தை மேற்கொள்ளும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த புதிய மசோதாவை கண்டித்து நேற்று நாடு முழுவதும் மருத்துவர்கள் 12 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது.

அப்போது பேசிய அ.தி.மு.க. எம்.பி சி.மகேந்திரன், புரட்சிகர சோசலிஸ்டு கட்சி உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் ஆகியோர் இந்த மசோதா முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே மத்திய அரசு இதை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மசோதா பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளது. எனவே அதை தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சி.மகேந்திரன் வற்புறுத்தினார்.

இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் எம்.பி.க்களும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல இலாகா தொடர்புடைய நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினர். இதேபோல் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அவர் கூறுகையில், இந்த மசோதா மக்களவையின் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக்குழு இந்த மசோதாவை நன்கு ஆய்வு செய்து வருகிற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தாக்கல் செய்யும்படி சபாநாயகர் உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மந்திரியின் வேண்டுகோளை ஏற்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதே கோரிக்கையை நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவேசமாக எழுப்பினர்.

அப்போது பேசிய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா, மருத்துவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த மசோதா மருத்துவ தொழிலுக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்றார்.

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பின் மருத்துவர்கள் தங்களது 12 மணி நேர வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com