

பீஜிங்,
இந்தியாவும், சீனாவும் 3,488 கி.மீ. தொலைவிலான சர்வதேச எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் பல இடங்களில் இரு நாடுகளுக்கு இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இந்த சர்ச்சைகளை தீர்ப்பதற்காக இரு நாடுகளும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த எல்லை பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், சீன வெளியுறவு மந்திரியும் அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரதிநிதிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் 21-வது எல்லை பேச்சுவார்த்தை நேற்று சீனாவின் சிச்சுவான் மாகாணத்துக்கு உட்பட்ட செங்குடுவுக்கு அருகே உள்ள டிஜியாங்யான் நகரில் நடந்தது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வூகன் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடத்திய சந்திப்புக்கு பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.