தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 சிறந்த குழுக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவும் இடம்பெற்றது.
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் 'வளர்ந்த இந்தியா' எனும் பொருளில் 'விக்சித் பாரத்' என்ற தலைப்பில் டெல்லி பாரத் மண்டபத்தில் 29-வது தேசிய இளையோர் திருவிழா கடந்த 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, ''மை பாரத்'' என்ற இணையதளம் வாயிலாக 4.20 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதிலும் இருந்து 50 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வினாடி-வினா, கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் இணையவழியாகவும், நேரடியாகவும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 300 பேர் இந்த விழாவில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி தமிழ்நாட்டில் இருந்து 82 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அப்படி தேர்வானவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 9-ந்தேதி பிரதமரின் சங்கராலயா, போர் நினைவு சின்னங்களை அவர்கள் பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்பின்னர், 10-ந்தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோருடன் உரையாடவும் வாய்ப்பை வழங்கினர். அதனைத் தொடர்ந்து 11-ந்தேதி இஸ்ரோ விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா, பிரசாந்த் நாயர் உள்ளிட்டோருடனும் அவர்கள் கலந்துரையாடினர்.

இந்த விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று(திங்கட்கிழமை) டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, 'இளைஞர்களுடன் வளர்ந்த இந்தியா' குறித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில், 'சமூக நோக்கம்' பிரிவின் கீழ் திட்டங்களை உருவாக்கிய சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பிரதமர் மோடியுடன் உரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, இந்தியா முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 சிறந்த குழுக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவும் இடம்பெற்றது. இந்த குழுவைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பா.ரித்திகா, து.சஞ்சீவ், ஆ.அழகப்பன் ஆகியோர் ''எடு4ஆட்டிசம்'' என்ற திட்டத்தை உருவாக்கி இருந்தனர்.

அந்த குழுவில் தமிழ்நாட்டில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பா.ரிதிகா, பிரதமரிடம் அவர்கள் உருவாக்கிய திட்டத்தை எடுத்துக்கூறும் வாய்ப்பை பெற்றார். அவர், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அவர்களுடைய திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதனை பிரதமர் மோடியும் உன்னிப்பாக கவனித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற 82 பேரில் ரிதிகா என்பவரிடம் மட்டுமே பிரதமர் மோடி கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com