

புதுடெல்லி,
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உலகில், மிகப் பெரிய ஜனநாயக நாடாக, இந்தியா மதிக்கப்படுகிறது. நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி, நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளர். இந்திய கலாசாரம், பாரம்பரியம் ஆகிவற்றின் மீது, பெரும் மதிப்பு கொண்டிருந்த நேரு, அவற்றை அடித்தளமாக வைத்து, நவீன இந்தியாவை உருவாக்கினார்.
இந்த புத்தகத்தில் நேருவின் உன்னதமான புத்தகங்கள், அவரது உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது மிகவும் வெளிப்படையான சில நேர்காணல்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. நேரு இல்லாவிட்டால், இன்று உள்ள நிலையை, இந்தியா எட்டியிருக்க முடியாது. ஆனால், துரதிருஷ்டவசமாக, ஒரு பிரிவினர், நேருவை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு, நேருவை குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பொய் தகவல்களை, வரலாறு ஏற்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தியாவில், பல மில்லியன் மக்களை தவிர்த்துவிட்டு பயங்கரவாத சிந்தனையை வளர்க்க, தேசியவாதமும், பாரத் மாதா கி ஜெய் கோஷமும், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.