தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

நீங்கள் ஓய்வெடுங்கள். தொடர்ந்து எங்களை வழிநடத்தி செல்லுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Published on: 

மும்பை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். கடந்த 2-ந்தேதி இருமல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர், புனே நகரில் உள்ள ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த அவர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

மீண்டும் அனுமதி

இந்நிலையில், சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி அவருடைய மகளான பாராமதி தொகுதிக்கான எம்.பி. சுப்ரியா சுலே நேற்று கூறும்போது, சரத் பவார் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. வருத்தம் தெரிவித்த மற்றும் வேண்டி கொண்ட அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.

டிஸ்சார்ஜ்

கடந்த 2-ந்தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர் வைக்கப்பட்டார். இதில், அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. இதனை அடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் அனுமதித்தனர்.

அப்போது அவரிடம் தொலைபேசி வழியே பேசிய பிரதமர் மோடி, போதிய ஓய்வு எடுக்கும்படியும், பயணங்களை குறைத்து கொள்ளவும், உணவில் அதிக கவனம் செலுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

சுப்ரியா, தேச விவகாரங்களை கவனித்து கொள்ளட்டும். நீங்கள் ஓய்வெடுங்கள். தொடர்ந்து எங்களை வழிநடத்தி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

X