

புவனேசுவரம்,
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதியும், மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் (வயது 72) தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சி கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது.
இந்த நிலையில், அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் 147 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
இதில் 112 இடங்களில் பிஜூ ஜனதாதளம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி, 2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட ஹிஞ்சிலி மற்றும் பிஜேப்பூர் என 2 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க கவர்னர் கணேஷி லால் அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து புவனேசுவரம் இட்கோ பொருட்காட்சி மைதானத்தில் நேற்று நடந்த கண்கவர் விழாவில், ஒடிசாவின் முதல்-மந்திரியாக தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவி ஏற்றார்.
அவருக்கு கவர்னர் கணேஷி லால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நவீன் பட்நாயக்குடன் 11 கேபினட் மந்திரிகளும், 9 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
இதற்கு முன்பு நவீன் பட்நாயக் பதவி ஏற்றபோதெல்லாம் பதவி ஏற்பு விழா, கவர்னர் மாளிகையில்தான் நடந்துள்ளது. இப்போதுதான் முதல் தடவையாக திறந்தவெளி மைதானத்தில் நடந்தது.
விழாவில் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா, பல்வேறு பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்றவுடன் நவீன் பட்நாயக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கடந்த 19 ஆண்டுகளாக நினைவுகூரத்தக்கதாக என் தனிப்பட்ட வாழ்க்கைப்பயணம் அமைந்துள்ளது. இன்று (நேற்று) 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி ஏற்கும் நிலையில், மறுபடியும் 4.5 கோடி குடும்ப உறுப்பினர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கையுடன் வைத்துள்ள பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நவீன் பட்நாயக்குக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர், ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5-வது முறையாக பதவி ஏற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கு பாராட்டுகள். அவரும், அவரது குழுவினரும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்க நல்வாழ்த்துகள். ஒடிசாவின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தனது ஒத்துழைப்பை வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறேன் என கூறி உள்ளார்.