தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே பாண்டியன் அறிவிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்த விகே பாண்டியன், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே பாண்டியன் அறிவிப்பு
Published on

புவனேஷ்வர்,

 ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜேடிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் 147 இடங்களில் பாஜக 79 இடங்களை பெற்று முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேடி 51, காங்கிரஸ் 14, பிற கட்சிகள் 4 இடங்களை பெற்றன.

ஒடிசவில் முதல் மந்திரியாக இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு வலது கரம் போல செயல்பட்டவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒடிசா பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். தனது பொறுப்பில் இருந்து  கடந்த ஆண்டு விலகிய வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தோல்வி அடைந்த பிறகு  விகே பாண்டியனுக்கு  நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வி.கே. பாண்டியன் கூறியதாவது:- தீவிர அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். ஐ.ஏ.எஸ்., பதவியை துறந்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மூதாதையர்களின் சொத்துகள் தான் என் வசம் உள்ளன.

நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளன. மக்களுக்கு சேவையாற்றவே ஐ.ஏ.எஸ்., பணிக்கு வந்தேன். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன்" இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com