மருத்துவ அவசர நிலை... எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை

மோசமான வானிலை நிலவியபோதும், மீட்புக் குழுவினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, வின்ச் மூலம் நோயாளியை கப்பலில் இருந்து வெளியேற்றினர்.
மருத்துவ அவசர நிலை... எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை
Published on

புதுடெல்லி:

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஈகிள் வெராக்ரூஸ் என்ற எண்ணெய் கப்பல் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் வந்தபோது, அந்த கப்பலில் இருந்த ஒரு ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவ அவசரநிலை குறித்த செய்தி இந்திய கடற்படைக்கு கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நோயாளியை அழைத்து வருவதற்கு உதவி செய்வதற்காக ஐ.என்.எஸ். சாரதா கப்பலும் அங்கு திருப்பி விடப்பட்டது.

ஹெலிகாப்டர், எண்ணெய்க் கப்பலை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. மழை பெய்துகொணடிருந்தது. இதனால் அந்த கப்பலில் தரையிறங்க முடியவில்லை. எனினும் மீட்புக் குழுவினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, வின்ச் மூலம் அந்த நோயாளியை கப்பலில் இருந்து வெளியேற்றினர்.

41 வயதான அந்த ஊழியர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் கப்பலில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு, ஐ.என்.எஸ். கருடாவை வந்தடைந்ததும், மேல்சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இத்தகவலை இந்திய கடற்படை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, மீட்பு பணி தொடர்பான வீடியோவையும் ஷேர் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com