சுனேத்ரா, துணை முதல்-மந்திரி ஆகிறார் இன்று பதவி ஏற்க வாய்ப்பு

துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
சுனேத்ரா, துணை முதல்-மந்திரி ஆகிறார் இன்று பதவி ஏற்க வாய்ப்பு
Published on

மும்பை,

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்தநிலையில், அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்” எனறார்.

தற்போது அஜித்பவார் மறைவால் பாராமதி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com