பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்

நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்
Published on

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முக்கிய மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

எம்.பி.க்கள் கூட்டம்

இந்த சூழலில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில், மங்கள் மிலன் என்ற பெயரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களின் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. இதற்காக நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி கூட்ட அரங்கில் கூட்டம் நடந்து வருகிறது.

மத்திய மந்திரிகள்

இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவிடம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் சந்திப்பு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அது நன்றாக நடந்தது என்று கூறி விட்டு சென்றார். நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.

இந்த நிலையில், பல முக்கிய மசோதாக்கள் மற்றும் நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சிகளின் அமளியை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com