

புதுடெல்லி,
வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது. பகலில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. டெல்லியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று வரலாறு காணாத பனி மூட்டம் காணப்பட்டது. அருகில் நிற்பவர்களை கூட காண முடியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்தது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.6 செல்சியசாக பதிவாகி இருந்தது. டெல்லியில் நேற்று கடும் பனி மூட்டத்தினால் வாகன மற்றும் ரெயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலைய பகுதியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமான வருகை மற்றும் புறப்பாடு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று பகல் 11.30 மணிக்கு பிறகுதான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டன.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 530 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சுமார் 320 விமானங்கள் புறப்படுவதிலும், 210 விமானங்கள் வருகையிலும் தாமதம் ஏற்பட்டது. 20 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பனி மூட்டம் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது பயணிகளை விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை விவரங்களை முழுமையாக அறிந்து விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டன.
டெல்லியை அடுத்த நொய்டாவில் (உத்தரபிரதேச மாநிலம்) உள்ள தாங்கூரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சென்ற கார் கடும் பனி மூட்டம் காரணமாக கெர்லி என்ற கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். காயம் அடைந்த 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி அவர் டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். பனி காலத்தில் மிகவும் கவனமாக சாலையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.