முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

பெண்களுக்கு சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ராஷ்திரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சார்பில் விஜயதசமி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- நாம் நமது பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது. உலகில் நமது மதிப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. நாம் இலங்கைக்கு உதவிய விதம் மற்றும் உக்ரைன்-ரஷ்யா பிரச்சினையில் நமது நிலைப்பாட்டை நாங்கள் கேட்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

கொரோனா தொற்றிற்கு பிறகு நமது பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது, அது மேலும் வளரும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். விளையாட்டிலும் நமது வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மாற்றம்தான் உலக விதி, ஆனால் சனாதன தர்மத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பயணத்திற்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற வழிவகுக்க வேண்டும். இதுவே அனைவரின் விருப்பமாகும். இதற்கு சமூகம் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டும்.

மக்கள் தொகைக்கு வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் மக்கள் தொதை அதிகரித்தால் அது சுமையாகிவிடும். மக்கள் தொகை ஒரு சொத்தாகக் கருதப்படும் மற்றொரு பார்வை உள்ளது. இரண்டு அம்சங்களையும் மனதில் வைத்து அனைத்து மக்களுக்கான மக்கள் தொகைக் கொள்கையில் நாம் பணியாற்ற வேண்டும்.

தவறுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும், ஆனால் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். தவறுக்கு எதிராக குரல் எழுப்புவது சகஜமாக மாற வேண்டும்.நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களால் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்று சிலர் பயமுறுத்துகின்றனர். இது சங்கத்தின்(ஆர்எஸ்எஸ்) இயல்பும் அல்ல இந்துக்களின் இயல்பும் அல்ல. சகோதரத்துவம், நட்புறவு மற்றும் அமைதியின் பக்கம் நிற்க சங்கம் (ஆர்எஸ்எஸ்) தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணியான சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மத்திய மந்திரி நிதின் கட்கரி, மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com