‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல்

உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில், சி.பி.எஸ்.சி. நடத்தி வரும் நுழைவுத்தேர்வுகளை மட்டும் இந்த முகமை நடத்தும். பிறகு, படிப்படியாக மற்ற நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும்.

தற்போது, மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வையும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்காக கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வையும் சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை, இனிமேல், தேசிய தேர்வு முகமை நடத்தும். இதன் தலைவரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கும்.

இந்த முகமைக்கு ஒரே நேர மானிய உதவியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கும். இதைக்கொண்டு, முகமை தனது முதல் வருட பணிகளை தொடங்கும். பிறகு தனது செலவுகளை தானே கவனித்துக்கொள்ளும். தன்னாட்சி அமைப்பான இந்த முகமை அமைக்கப்படுவதால், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கும், அதற்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி ஒதுக்குவதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கீழ்கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக 2-வது தேசிய நீதித்துறை சம்பள கமிஷனை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.பி.வெங்கட்ராம ரெட்டி இருப்பார். 18 மாத காலத்துக்குள் இந்த கமிஷன், மாநில அரசுகளிடம் தனது சிபாரிசுகளை தாக்கல் செய்யும்.

இருப்பு வைக்கப்பட்ட பருப்புகளை மதிய உணவு திட்டம் போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக ஹாங்காங்குடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com