நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கியது... 22.7 லட்சம் பேர் பங்கேற்பு

பிற்பகல் 1.30 மணிக்கு பின்னர் வருகை தந்த மாணவர்களுக்கு தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
நாடு முழுவதும் நீட் மறுதேர்வு தொடங்கியது... 22.7 லட்சம் பேர் பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 551 நகரங்களில் நடைபெற்று வரும் 'நீட்' மறுதேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

'நீட்' மறுதேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த வகையில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் (மே) 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததையடுத்து அது விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 'நீட்' மறுதேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 500-க் கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததையடுத்து அது விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 'நீட்' மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி (இன்று) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

தேர்வு தொடங்கியது...

அதன்படி, நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தற்போது நீட் மறுதேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 500-க் கும் மேற்பட்ட மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை தந்த மாணவர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.15 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.

சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

கடும் கட்டுப்பாடுகள்

கடந்த முறை தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. வினாத்தாள் தயாரிப்பு பணியில் இருந்த ஒருவர்கூட இன்னும் வெளியே விடப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வை மிகவும் நியாயமான முறையில் நடத்தி முடித்திட தேசிய தேர்வு முகமை விழிப்புடன் பணியாற்றி வருகிறது.

பேனா தேவையில்லை

வீட்டில் இருந்து தேர்வுக்கூடத்துக்கு செல்லும்போது ஹால் டிக்கெட், அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட்அளவு புகைப்படங்கள் மற்றும் தண்ணீர் தேவையென்றால் தண்ணீர் பாட்டில் (வெளிப்படையானது) ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. செல்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் போன்றவை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பேனாகூட எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கான பிரத்யேக பேனா, தேர்வு அறையில் வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com