‘நீட்’ மறுதேர்வு எழுதும் மையங்களை மாற்றிக்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை ஏற்பாடு

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
‘நீட்’ மறுதேர்வு எழுதும் மையங்களை மாற்றிக்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை ஏற்பாடு
Published on

புதுடெல்லி,

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் ஏற்கனவே கசிந்தது, பின்னர் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை அந்த தேர்வை ரத்து செய்துள்ளது. முறைகேடு செய்தவர்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நீட் மறுதேர்வு ஜூன் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தமிழ் உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத் தப்படுவது குறிப்பிடத்தக்கது. தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை, தேர்வர்களின் வசதிக்காக, தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கான இணைய வசதியை திறந்துள்ளது. வருகிற 21-ந்தேதி இரவு 11.50 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. ஹால்டிக்கெட் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வர்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் தேர்வு மைய விவரங்கள் இடம் பெற்று இருக்கும். தேர்வர்கள் இது குறித்த கூடுதல் விவரங்களை neet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com