நீட் தேர்வில் மாணவியிடம் வரம்பு மீறல்: பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் சிபிஎஸ்இ

நீட் தேர்வின் போது மாணவியை உள்ளாடையை அகற்ற கோரிய பள்ளியின் முதல்வர் மன்னிப்பு கேட்க சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டு உள்ளது.
நீட் தேர்வில் மாணவியிடம் வரம்பு மீறல்: பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் சிபிஎஸ்இ
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 19வயது மாணவியை தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றும்படி கூறினார். அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்பு கொக்கி(பின்) இருப்பதால்தான் சத்தம் கேட்பதாக விளக்கம் அளித்து உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றி தனது உள்ளாடையை கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.

தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளநிலையில் யாரோ சிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதி என சிபிஎஸ்இ விளக்கம் அளித்தது.

கண்ணூரில் நீட் தேர்வின்போது நடத்த சம்பவமானது துரதிருஷ்டவசமானது. தேர்வின் போது கண்காணிப்பு பணியில் இருந்த யாரோ சிலரது தனிப்பட்ட ஆர்வமிகுதியின் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் இதுவாகும். இருப்பினும், தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தவறுதலாக ஏற்பட்ட சிரமத்திற்கு வாரியம் வருந்துகிறது. தேர்வுகளுக்கு நுழைவதற்கு முன்னர் எடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதளங்கள், தகவல் அறிவிப்புக்கள், அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு எழுத வருபவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது, என சிபிஎஸ்இ விளக்கம் அளித்து உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 4 ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. இப்பிரச்சனைக்கு கேரள சட்டசபையிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை பூதகரமான நிலையில் சிபிஎஸ்இ சேர்மன் ஆர்கே சதுர்வேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவதேகரை சந்தித்து பேசினார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த பள்ளியின் முதல்வர் சம்பவத்திற்கு மாணவியிடம் மன்னிப்பு கேட்க சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com