

புதுடெல்லி,
முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் மன்சுக் மாண்டவியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மருத்துவ மானவர்கள் கலந்தாய்வு நடத்தக் கோரி அண்மையில் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தும் அரசாணைக்கு எதிராக பல்வேறு முதுகலை மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் காரணமாக, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்தனர்.