"காங்கிரசோ, பாஜகவோ எங்களை அழைப்பது இல்லை" - அகிலேஷ் யாதவ்

அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடும் ஒரே கட்சி சமாஜ்வாடி கட்சி மட்டுமே என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

லக்னோ,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அடுத்ததாக நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான 2வது பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை ராகுல் நடத்தி வருகிறார்.

இதன்படி அடுத்ததாக மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவரது யாத்திரை, பிப்ரவரி 14-ந் தேதி, உத்தரபிரதேசத்தை அடையும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 11 நாட்களில் 20 மாவட்டங்கள் வழியாக 1,074 கி.மீ. பயணம் செய்கிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்துக்கு வரும்போது, ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்பீர்களா? என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''காங்கிரசோ, பா.ஜனதாவோ தங்கள் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பது இல்லை. எனவே, நான் பங்கேற்பது சந்தேகம்தான்'' என்று அவர் கூறினார்.

முன்னதாக அங்குள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து "சம்விதன் பச்சாவோ, தேஷ் பச்சாவோ சமாஜ்வாடி பிடிஏ யாத்ரா"வை கொடியசைத்து தொடங்கி வைத்த அகிலேஷ் யாதவ், இந்த யாத்திரை டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் சித்தாந்தங்களை கிராமங்கள் தோறும் பரப்பும் என்றார்.

மேலும் பிச்சாடா, தலித், அல்ப்சங்க்யாக்-முஸ்லிம்கள் (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள்) "பழைய சோசலிஸ்டுகளின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் உறுதிமொழி எடுத்துள்ளோம்,  இந்த யாத்திரை மாநிலத்தின் பல மாவட்டங்களை உள்ளடக்கும். அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடும் ஒரே கட்சி சமாஜ்வாடி கட்சி மட்டுமே" என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com