

பாட்னா,
நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, பீகாரில் பாயும் ஆறுகளில் அங்கிருந்து புதிய வகை மீன்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை உண்ணும் மக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அந்த மீன்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், பீகார் மீன் பிரியர்களுக்கு மாநில கால்நடைத்துறை மந்திரி நந்த் கிஷோர் ராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், 'நேபாளம் வழியாக பாயும் கண்டக் போன்ற நதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவை தோற்றத்தில் தெளிவாக வேறுபடுகின்றன. இந்த மீன்கள் வயிற்று வலி, வாந்தி மற்றும் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது.
இத்தகைய மீன்களை உட்கொள்வது நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கலாம்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மீன்களை பிடிப்பதையும், விற்பதையும் தவிர்க்குமாறு மீனவர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.