ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம்; இயல்பு நிலை திரும்புகிறது

நேபாளத்தில் மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம்; இயல்பு நிலை திரும்புகிறது
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல், குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.மந்திரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது.இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட ஜென் சி தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டுவில் கடந்த 8-ந்தேதி ஆயிரக்கணக்கில் கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தள தடையை கண்டித்து அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்தியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது.

இந்த போராட்டம் வன்முறையை தொடர்ந்து  பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார். பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த சில நிமிடங்களில் அவர் பதவி விலகினார்.பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியபோதும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.எனவே ராணுவம் களத்தில் இறங்கியது. நேற்று முன்தினம் இரவில் இருந்து நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மாலை 5 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும், அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தது.

மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்திய ராணுவம், போராட்டம் என்ற போர்வையில் நடக்கும் கொள்ளை, தீ வைப்பு போன்ற சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கூறியுள்ளது.நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் அவர்கள் தீவிரமாக ரோந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் ஆங்காங்கே சாலைகளில் நடந்து சென்றதையும் காண முடிந்தது. எனினும் தலைநகர் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com