ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நேபாள இளம்பெண்கள்: கொலையா? போலீஸ் விசாரணை

பெங்களூரில் காலி இடத்தில் நின்ற மரத்தில் நேபாள நாட்டைச் சேர்ந்த 2 இளம்பெண்கள், ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
2 இளம்பெண்கள் உடல் மீட்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரில் மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாள பெண்கள் 2 பேர் மீட்கப்பட்ட சம்பவம், கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய 2 இளம்பெண்கள் மீட்பு

பெங்களூரு எலகங்கா போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள் ஜக்கூர் பகுதியில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது. அந்த ஓட்டலுக்கு அடுத்துள்ள காலி நிலப்பகுதியில் இருந்த மரத்தில் நேற்று காலை இரண்டு இளம்பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தபடி காணப்பட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, தூக்கில் தொங்கியிருந்த அந்த இரண்டு இளம்பெண்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டு வேலைகள் செய்துவந்த பெண்கள்

விசாரணையில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த சைஜனா (வயது 22), ரீட்டா(23) என்பது தெரியவந்தது. இவர்களில் சைஜனா அம்ருதஹள்ளியிலும், ரீட்டா பிரேசர் டவுனிலும் வசித்து வந்தார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தான் 2 பேரும் நேபாளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூருவில் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தனர்.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்கள் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரும் 2 பேரையும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் அதுபற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com