நேதாஜியின் வாழ்க்கை, பணி, முடிவுகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியா பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவி செய்வதனை கண்டால் நேதாஜி பெருமை கொள்வார் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நேதாஜியின் வாழ்க்கை, பணி, முடிவுகள் நமக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
Published on

கொல்கத்தா,

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், அரசு சார்பில் பராக்கிரம திவாஸ் எனப்படும் துணிச்சல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்துள்ளார். பின்னர் கொல்கத்தாவிலுள்ள நேதாஜி பவன் மற்றும் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு சென்றார். நூலகத்தில் இருந்த கலைஞர்கள் மற்றும் சிறப்பு குழுவினரிடம் பிரதமர் உரையாடினார்.

இதன்பின்பு கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா நினைவகத்திற்கு அவர் சென்றார். அவரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் வரவேற்றனர். இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்பின்னர் அவர் கூட்டத்தின் முன் பேசும்பொழுது, நேதாஜியின் வாழ்க்கை, அவரது பணி மற்றும் முடிவுகள் நம் அனைவருக்கும் உத்வேகம் ஏற்படுத்தும். அதுபோன்ற தீர்க்கமான உறுதியுடன் உள்ள ஒரு நபருக்கு சாத்தியமில்லாதது என எதுவும் இல்லை.

நேதாஜி அவர்கள் ஏழ்மை, கல்வியறிவு இன்மை, நோய் ஆகியவற்றை நாட்டின் மிக பெரிய பிரச்னைகளாக கணக்கிடுவது வழக்கம். சமூகம் ஒன்றுபட்டால் இந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

நேதாஜியால் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் சக்தி வாய்ந்த அவதாரத்தினை அசல் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோடு வரை உலக நாடுகள் சான்று அளித்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கெல்லாம் சவால் விடும் முயற்சிகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் நாடு சரியான பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி எப்படி உதவி வருகிறது என நேதாஜி அவர்கள் பார்த்தால் பெருமை கொள்வார் என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com