

புதுடெல்லி,
புதிய வடிவிலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த கட்டமைப்புக்கு மத்திய மந்திரிசபை விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியா பல்வேறு வெளிநாடுகளுடன் இருத ரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை செய்து வருகிறது. இந்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் என்பது, ஒரு நாட்டின் முதலீட்டாளர்கள் மற்ற நாட்டில் செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் ஒரு உடன்படிக்கையாகும்.
வெளிநாடுகளுடன் செய்யப்படும் இந்த முதலீட்டு ஒப்பந்த வடிவம் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. இருதரப்பு நலன் சார்ந்தும், வணிகம் செய்யும் விதிகளை எளிமைப்படுத்தியும் அது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 2016-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஒப்பந்த கட்டமைப்பு மூலம் தற்போது வெளிநாடுகளுடன் இந்தியா இருதரப்பு ஒப்பந்தங்களை போட்டு வருகிறது.
இதிலும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதால், புதிய ஒப்பந்த வடிவம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு விரைவில் மந்திரிசபை ஒப்புதல் வழங்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த கட்டமைப்பு புதிதாக தயாராகி உள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். அதுவரையில் நாங்கள் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவில்லை.
புதிய கட்டமைப்பில் இருக்கும் அம்சங்களின் அடிப்படையில் பல நாடுகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இந்த அடிப்படையில் சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அமீரகம், ஓமன் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளுடனும் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் கனடா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எல்லாம் சரியாக நடந்தால், டிசம்பருக்குள் 3 நாடுகளுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
கடந்த 12 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய வடிவம், 2016-ல் அங்கீகரிக்கப்பட்ட மாதிரியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும், இரு தரப்பு முதலீட்டாளர்களுக்கும் சரியான பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் கடினமாகவும், கடுமையாகவும் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.