நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ஆணையங்கள் - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ஆணையங்கள் அமைக்க, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ஆணையங்கள் - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்
Published on

புதுடெல்லி,

காவிரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிநீர் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் ஆகிறது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை உள்ளது.

இப்படி மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிநீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறபோது, அதற்கென்று ஆணையங்கள் இருந்தால் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு கண்டு விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

எனவே இதற்கான ஒரு சட்டம் இயற்றி, 13 நதி நீர் ஆணையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் காவிரி, கங்கை, சிந்து, கோதாவிரி, பிரம்மபுத்திரா-பராக், மகாநதி, மாஹி, கிருஷ்ணா, தாபி, சுபர்நரேக்கோ, பிராமணி-பைதாரணி, நர்மதா, பெண்ணாறு ஆகிய 13 நதி நீர் பகிர்வு, பராமரிப்புக்காக நதி நீர் மேலாண்மை மசோதா-2018 என்ற மசோதாவை மத்திய அரசு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது நதி நீர் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சம்மந்தப்பட்ட மாநில முதல்-மந்திரிகள் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு மன்றமாக அமையும். நதி நீர் மேலாண்மை மசோதா சட்டமாகிறபோது, அது மாநில முதல்-மந்திரிகள் ஆண்டுக்கு 2 முறை சந்தித்து பேசுவதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கும்.

நதி நீர் ஆணையமானது ஆட்சிமன்ற கவுன்சில், நிர்வாக குழு என இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். ஆட்சிமன்ற கவுன்சில், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்டிருக்கும். தலைவர் பதவி அவர்களுக்குள் சுழற்சி முறையில் வரும்.

மேலும் நதி நீர் ஆணையங்கள் ஒவ்வொன்றும் மாஸ்டர் பிளான் ஒன்றையும் கொண்டிருக்கும். நதி நீர் மேலாண்மை, நீர்வள அளவீடு, நிலத்தடி நீர், நீர்நிலைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வெள்ள கட்டுப்பாடு, வடிகால் மற்றும் நதிநீர் ஒதுக்கீட்டின் பொருளாதார ஆய்வு என அனைத்து அம்சங்களையும், இந்த மாஸ்டர் பிளான் கொண்டிருக்கும்.

மத்திய அரசு புதிதாக இயற்றுகிற நதி நீர் மேலாண்மை சட்டம், 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட நதி வாரிய சட்டத்துக்கு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com