இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு கிடைத்த புதிய பெருமை - மோடி வாழ்த்து

வரும் ஆண்டுகளிலும் மெலோனி தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு கிடைத்த புதிய பெருமை - மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இத்தாலி நாட்டில் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்து வருபவர் என்ற பெருமையை ஜார்ஜியா மெலோனி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியா மெலோனி

இத்தாலி நாட்டின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி(வயது 49) கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி பதவியேற்றார். தற்போது வரை இத்தாலியின் பிரதமராக பதவி வகித்து வரும் மெலோனி, இன்றோடு தொடர்ச்சியாக 1,414 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இதன்மூலம், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நீண்ட காலம் தொடர்ச்சியாக இத்தாலியின் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை ஜார்ஜியா மெலோனி பெற்றுள்ளார். அதோடு, இத்தாலியின் பிரதமராக பதவி வகிக்கும் முதல் பெண்ணும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பணியாற்றும் பெருமையைப் பெற்றுள்ள எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், உறுதியான ஆதரவையும் பிரதிபலிக்கிறது.

இந்தியா-இத்தாலி இடையிலான சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை (Special Strategic Partnership) வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்காற்றியுள்ளது. இரு நாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாள் பிரதமர்

முன்னதாக கடந்த ஜூன் 10-ந்தேதி தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்ததன் மூலம், இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com