புதிய மருத்துவமனை, முதல் நாள் பணி... இரவில் பெண் நர்சுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் நர்சின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது.
புதிய மருத்துவமனை, முதல் நாள் பணி... இரவில் பெண் நர்சுக்கு நேர்ந்த கொடூரம்
Published on

உன்னாவ்,

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் துல்லாபூர்வா கிராமத்தில் நியூ ஜீவன் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் பங்கார்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்ரீகாந்த் கட்டியார் என்பவரால் இந்த மருத்துவமனை ஏப்ரல் 25ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் திகானா கிராமத்தில் வசித்த நஜியா (வயது 19) என்ற இளம்பெண் நர்சு பணியில் கடந்த வெள்ளி கிழமை சேர்ந்து உள்ளார். அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.

அடுத்த நாள் காலை மருத்துவமனையின் பின்புறம் இரும்பு தடி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்து உள்ளார். அவரது கழுத்து பகுதியில் கயிறு சுற்றப்பட்டு இருந்தது. முக கவசம் காணப்பட்டது. கைக்குட்டை போன்ற துணி ஒன்று அவரது கைகளில் இருந்தது. சுவருக்கும், நெஞ்சுக்கும் இடையே அவரது கைகள் பதிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனையில் ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நஜியாவின் தாயார் அளித்த புகாரின்பேரில் மருத்துவமனை உரிமையாளர் அனில் குமார், மருத்துவமனையில் பணியாற்றிய நூர் ஆலம், சந்த் ஆலம் மற்றும் ஒரு நபர் என 4 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண், தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர்.

இளம்பெண்ணின் தந்தை உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்தில் சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்குகளில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், உன்னாவ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.

குல்தீப் சிங் செங்கார் 2017-ம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், உன்னாவ் மாவட்டத்தில் மற்றொரு கொடூர முறையிலான பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com