வங்கிகளில் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

வங்கிகளில் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் வாங்கிய கடனுக்காக விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
Published on

பெங்களூரு:

சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கட்டாயப்படுத்துவது சரியில்லை

விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள். இவ்வாறு கடன் வாங்கும் விவசாயிகள், பயிர்கள் சேதம் உள்ளிட்ட காரணங்களால் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளில் சில வங்கிகள் ஈடுபட்டு வருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

இதுபற்றி விவசாய சங்கங்களும் என்னிடம் புகார்கள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் சில மாவட்டங்களில் வறட்சியால் விவசாயி பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து இருக்கும் சந்தர்பபத்தில், வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது சரியில்லை.

புதிய சட்டம் அமல்

கடனுக்காக விவசாயிகளின் வீடுகள், தோட்டங்கள், பிற சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளும் ஏற்புடையது இல்லை. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு விவசாயிகளையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். விவசாயிகளிடம் வலுக்கட்டாயப்படுத்தியும், அவர்களை தொல்லை செய்தும் கடனை வசூலிப்பது சரியான நடவடிக்கை இல்லை. எனவே வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறி, அவர்களை சொத்துகளை ஜப்தி செய்வதை தடுக்க புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.

இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 14 லட்சம் விவசாயிகளின் பிள்ளைகள் கல்வி கற்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல், வரும் நாட்களில் ஆட்டோ, வாடகை கார் டிரைவாகள், நெசவாளர்கள், பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்க திட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com