

புதுச்சேரி
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. அந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதனால் கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று, என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்த நிலையில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். இதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக முதலில் பொறுப்பேற்று கொண்டார்.
அவரை தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் முறைப்படி எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்று கொண்டனர். ஒருவர் பின் ஒருவராக தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் என அவர்கள் பதவியேற்று கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவை நிகழ்ச்சியை அன்பழகன் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-அமைச்சராக 5-வது முறையாக ரங்கசாமி, கடந்த 13-ந்தேதி காலை 9.45 மணிக்கு பதவியேற்று கொண்டார். அவர் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
ஆனால் தேர்தல் விதிகளின்படி, 2 தொகுதிகளில் போட்டியிட்டால், 14 நாட்களில் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி, கடந்த 17-ந்தேதி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி இதற்கான கடிதத்தை சட்டசபை செயலர் தயாளனிடம் வழங்கினார்.
அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக புதுச்சேரி சட்டசபை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.