

கொல்கத்தா,
உள்நாட்டு கடல்சார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அதிநவீன கடல்சார் ஆய்வுக்கப்பலான 'சாகர் மந்தன்' கப்பலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், இந்தியாவின் தற்சார்பு பயணத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ரிஷி பங்கிம் கப்பல் கட்டும் தளத்தில் இந்த தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துருவ மற்றும் ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்திற்காக, பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் மூலம் இந்த கப்பல் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிதேந்திர சிங் டெல்லியில் இருந்தபடி, காணொளி வாயிலாக இக்கப்பலை தொடங்கி வைத்தார். கடற்படையின் மரபுப்படி, அவரது துணைவியார் மஞ்சு சிங் இந்த கப்பலுக்கு முறைப்படி 'சாகர் மந்தன்' என்று பெயரிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீனிவாச குமார், அவரது துணைவியார் கவிதா எல்லண்டி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:–
இந்த அதிநவீன கப்பல் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை ஆகும். உலக அளவில் கடல்சார் அரசியல் மற்றும் தற்சார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இக்கப்பலை வடிவமைத்து, தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு ஆண்டுகளில், கப்பலின் அடித்தள கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட 5 மாதங்களிலேயே இந்த இமாலய பணிகளை பொறியாளர் குழுவினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இது அவர்களின் சிறப்பான செயல்திறனுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மந்திரி ஜிதேந்திர சிங் பேசினார்.