புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளது - கனிமொழி

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நிச்சயமாக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளது - கனிமொழி
Published on

புதுடெல்லி ,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி.கனிமொழி கூறியதாவது,

புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளதாக தெரிகிறது. அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு? . அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக,  பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது? . பாதுகாப்பு குளறுபடியால் நாடாளுமன்றத்தில் அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது;

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நிச்சயமாக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com