ஈட்டி எறிதலில் புதிய சாதனை: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ஈட்டி எறிதலில் புதிய சாதனை: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கத்தார் நாட்டின் தோகாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை. இந்த நிலையில், தனது 18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார். இதன் மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.

போட்டியில் முதலிடத்தை ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் (91.06 மீ) பெற்றிருந்தாலும், நீரஜ் சோப்ராவின் சாதனை பெருமைக்குரியதே என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மற்றோர் இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீ தூரம் எறிந்து, எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா. தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள். இந்தநிலையில், நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடு இது என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story