டிரோன் பயன்படுத்த புதிய விதிமுறை - மத்திய அரசு வெளியிட்டது

இந்தியாவில் டிரோன் பயன்படுத்த எண்ணற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி, வரைவு விதிகலைமத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டிரோன் பயன்படுத்த புதிய விதிமுறை - மத்திய அரசு வெளியிட்டது
Published on

புதுடெல்லி,

டிரோன் பயன்பாடு தொடர்பான, ஆளில்லா விமான திட்ட விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தன. இந்தநிலையில், இவற்றில் பல்வேறு திருத்தங்கள் செய்து வரைவு டிரோன் விதிகள்-2021-ஐ மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிரோன் பயன்படுத்துவதை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் இந்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை குறித்து பொதுமக்கள் ஆகஸ்டு 5-ந்தேதிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வரைவு விதிகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் டிரோன்களை இயக்க 25 படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது. இந்த படிவங்கள் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்படுகிறது. அதுபோல், டிரோன்களை இயக்குவதற்கான கட்டணம், பெயரளவுக்கான கட்டண நிலைக்கு குறைக்கப்படுகிறது. டிரோன்களின் அளவுக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கும் முறை நீக்கப்படுகிறது.

பராமரிப்பு சான்றிதழ், இயக்குபவர் உரிமம், மாணவர் ரிமோட் விமானி உரிமம் உள்பட பல்வேறு ஒப்புதல்கள் பெற வேண்டிய தேவை ரத்து செய்யப்படுகிறது. பசுமை மண்டலங்களில் 400 அடி உயரம்வரை டிரோன்களை பறக்க விடுவதற்கு அனுமதி பெற தேவையில்லை. அதுபோல், விமான நிலைய எல்லையில் இருந்து 8 முதல் 12 கி.மீ.க்குள் 200 அடி உயரம்வரை டிரோன்களை பறக்க விட அனுமதி தேவையில்லை.

வணிக பயன்பாடு அல்லாத மைக்ரோ டிரோன்கள், நானோ டிரோன்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் டிரோன்களுக்கு விமானி உரிமம் பெறத்தேவையில்லை. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் டிரோன்களை இயக்குவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. சரக்குகளை கொண்டு செல்வதற்காக டிரோன் வழித்தடம் உருவாக்கப்படும். டிரோன் மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com