கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள்; மும்பையில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி

கொரோனா ஊரடங்கால் 4½ மாதமாக மூடிக்கிடக்கும் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இதேபோல மற்ற அனைத்து கடைளையும், எல்லா நாட்களிலும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள்; மும்பையில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி
Published on

மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரம் மும்பை ஆகும்

எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிஷன் பிகின் அகெயன்' திட்டத்தின் கீழ் மும்பையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மும்பையில் அனைத்துவிதமான கடைகளை திறக்கவும், அரசு, தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படவும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோ, டாக்சிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தளர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் மார்க்கெட் பகுதிகளில் கடைகளை ஒருநாள்விட்டு ஒரு நாள் மட்டுமே திறக்க முடியும். இதேபோல மதுக்கடைகள் ஆன்லைன் மூலம் மட்டும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி நேற்று கடைகளை திறக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. இதன்படி நாளை (புதன்கிழமை) முதல் மும்பையில் வாரத்தின் 7 நாட்களும் அனைத்து விதமான கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

இதேபோல வணிக வளாகங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தியேட்டர்கள், உணவுகூட வளாகங்கள், உணவகங்களை திறக்க முடியாது. உணவகங்கள் ஆன்லைன் மூலம் மட்டும் உணவுப்பொருட்களை வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் மும்பையில் மதுக்கடைகளில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆன்லைனிலும் அரசின் வழிகாட்டுதல்களின்படி மது விற்பனை தொடரலாம். மதுக்கடைகளில் சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். மீறினால் குறிப்பிட்ட கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் சுமார் 4 மாதங்களாக மூடிக்கிடக்கும் நிலையில் மாநகராட்சியின் அனுமதி மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் குறைந்து வரும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பாகி விடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

மே மாதம் 4 மற்றும் 5-ந் தேதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com