

புதுடெல்லி,
சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய விதிகள் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகளின்படி, வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுடன் தொடர்புடைய சிம் கார்டு, அந்தச் செயலியைப் பயன்படுத்தும் சாதனத்தில் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமில் பதிவு செய்த சிம் கார்டை செல்போனில் இருந்து அகற்றினாலோ, அந்த சிம் கார்டு செயலிழந்தாலோ, மாற்றப்பட்டாலோ சம்பந்தப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். மீண்டும் உரிய சிம் கார்டைச் செயல்படுத்தும் வரை அந்தச் செயலிகளின் சேவைகள் தடைபட வாய்ப்புள்ளது.தங்களது சிம் கார்டை ஒரு செல்போனிலும், வாட்ஸ்அப் கணக்கை மற்றொரு சாதனத்திலும் பயன்படுத்துவோர், வைஃபை வசதியை மட்டுமே நம்பியிருப்போர் ஆகியோருக்கு இந்த விதிமுறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்திய மொபைல் எண்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்தபடி சைபர் குற்றங்கள், போலி அழைப்புகள், பிஷிங் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் நடைபெறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.சிம் கார்டு இல்லாமலேயே தகவல் பரிமாற்ற செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் வசதியை மோசடி கும்பல்கள் தவறாகப் பயன்படுத்துவதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஷேர்சாட், ஜியோசாட், ஜோஷ், அரட்டை உள்ளிட்ட செயலிகள் இந்த விதிமுறைகளின் கீழ் வருகின்றன. சிம் கார்டு சரிபார்ப்பு மற்றும் கணக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த விதிமுறையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.