கேரளாவில் மருத்துவக் கழிவுகளை அழிக்க ரூ.15½ கோடியில் புதிய திட்டம்

நெல்லை பகுதியில் கொட்டிய மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அகற்றி, மாற்று நடவடிக்கை எடுத்தது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேகரமான மருத்துவக்கழிவுகளை, தமிழ்நாடு நெல்லை மாவட்ட பகுதிக்கு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து, கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே கேரள அரசு, நெல்லை பகுதியில் கொட்டிய மருத்துவக்கழிவுகளை அகற்றி, மாற்று நடவடிக்கை எடுத்தது.
இந்தநிலையில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்க கேரள அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில மருத்துவக்கல்விதுறை இயக்குனர் டாக்டர் தாமஸ் மேத்யூ பரிந்துரை அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை அகற்றி, தரம் பிரித்து திடக்கழிவுகள் அகற்றும் சட்டத்தின் கீழ் எரியூட்டும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.15½ கோடி ஆகும்.
இந்த திடக்கழிவுகளை எடுத்துச்செல்லும் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் அவை செல்லும் இடங்கள் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்படும். பயோ மெடிக்கல் நிறுவனங்கள் கண்காணிப்பின் கீழ் திடக்கழிவுகள் பிரிக்கப்பட்டு தனி பைகளில் அடைக்கப்படும். தினமும் 84 டன் மருத்துவக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
இதற்கு தேவையான பொருட்களை பெறவும் மற்றும் உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மருத்துவக்கழிவுகளை கொட்டிய சம்பவம் மாநில அரசின் பெயருக்கு களங்கத்தை விளைவித்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவா் கூறினார்.






