மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை மரப்பாம்பு இனம் கண்டுபிடிப்பு!

இந்த பாம்பை 'அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனம்' என்ற பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை மரப்பாம்பு இனம் கண்டுபிடிப்பு!
புதிய வகை மரப்பாம்பு
Published on: 

பெங்களூரு,

மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப் பன்முகத்தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' என்ற புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது நீண்ட காலமாக வேறொரு பாம்பு இனமாக தவறாகக் கருதப்பட்டு வந்த நிலையில், 14 ஆண்டுகாலத் தொடர் ஆய்வுக்குப் பிறகு தனி இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு, எப்போது கண்டறியப்பட்டது?

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சுள்ளியாநெடுஞ்சாலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், வாகனங்களில் அடிபட்டு இறந்த நிலையில் 2 பாம்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் உடல் அமைப்பு மற்றும் பழைய ஆவணங்களை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். இதன் முடிவில், இது முற்றிலும் புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த நவம்பர் 12-ம் தேதி அன்று டாரோபானிகா என்ற சர்வதேச ஆய்விதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

பெயர்க்காரணம் என்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட ராணுவ அதிகாரியும் இயற்கை ஆர்வலருமான கர்னல் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் அவர்களைக் கவுரவிக்கும் வகையில், இப்பாம்பிற்கு பெடோம்ஸ் பிரான்ஸ்பேக் என பெயரிடப்பட்டுள்ளது.

தனித்துவமான அடையாளங்கள்

இதுவரை 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற பாம்பு இனத்துடன் இது குழப்பிக்கொள்ளப்பட்டது. ஆனால், சில பண்புகளில் இது தனித்து விளங்குகிறது. அதாவது இப்பாம்பின் நாக்கு அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. செதில்களின் எண்ணிக்கை, தலை வடிவம் மற்றும் உடலில் உள்ள கோடுகளின் அமைப்பு ஆகியவை மற்ற மரப்பாம்புகளிலிருந்து மாறுபட்டுள்ளன.

வாழிடமும் பாதுகாப்பும்

கேரளாவின் அகத்தியமலை (விதுரா) முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தாழ்வான காடுகள், ஆற்றங்கரைகள் மற்றும் பாக்கு, ரப்பர் தோட்டங்களில் இப்பாம்பு வாழ்கிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறப்பதே இப்பாம்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இதை 'அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனம்' என்ற பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

X