புதிய வருமான வரி முறை நடுத்தர வகுப்பினருக்கு பயன் அளிக்கும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரிமுறை நடுத்தர வகுப்பினருக்கு பயன் அளிக்கும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதிய வருமான வரி முறை நடுத்தர வகுப்பினருக்கு பயன் அளிக்கும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மரபு வழக்கப்படி, நேற்று அவர் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் மத்தியில் பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்யத் தூண்டும் அவசியம் இல்லை, ஆனால் முதலீடுகள் தொடர்பாக தனிப்பட்ட முடிவை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

புதிய தனிநபர் வருமான வரி முறை (2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது), நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் அளிக்கும். இந்த வரிமுறை அவர்கள் கையில் கூடுதல் பணத்தை விட்டு வைத்திருக்கும்.

வரி விகிதம்

மாற்றியமைக்கப்பட்ட சலுகை வரி விதிப்புகள் அடுத்த நிதி ஆண்டு முதல் (ஏப்ரல்-1) நடைமுறைக்கு வரும். இதன்கீழ் ரூ.3 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் 5 சதவீதமும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையில் 10 சதவீதமும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் 15 சதவீதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் 20 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதானி விவகாரம்

அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துக்கூறும்போது, " இந்திய ஒழுங்குமுறை அமைப்பினர் மிக மிக அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஒழுங்குமுறை அமைப்பினர் கைகளில் இந்த விஷயம் உள்ளது. இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர்கள் தங்கள் கால்களில் நிற்கிறார்கள்" என்றார்.

விலைவாசி உயர்வு பற்றிய கேள்விக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதில் அளித்தார். அவர், " 2023-24 நிதி ஆண்டில் சில்லரை பண வீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயராமல் இப்படியே தொடர்ந்தால் சில்லரை பணவீக்க விகிதம் மேலும் குறையும்" என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com