மக்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல்

மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், தலாக் என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா-2019 என்று அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தின் நகலையே மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும் பட்சத்தில் காலாவதியாகாது. ;அதே நேரத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும் மசோதா, மக்களவை பதவிக்காலம் நிறைவடையும்பட்சத்தில் காலாவதியாகி விடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com