சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்

புதிய இணையதளத்தின் மூலம் வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார். மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் சுப்ரீம் கோர்ட்டு மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், சுப்ரீம் கோர்ட்டில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மிக முக்கியமாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். அதோடு பழைய வழக்கு விசாரணைகளையும் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரங்களை மக்கள் எளிதான தேடல்கள் மூலம் பெறுவதற்கும் இந்த இணையதளம் உதவி செய்கிறது. கடந்தவாரம் தான், 'வாட்ஸ்-அப்' மூலம் வழக்கு விவரங்களை வக்கீல்களுக்கும், சம்பந்தப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார். அதாவது வழக்கினை தாக்கல் செய்யும் பொதுமக்கள் மற்றும் வக்கீலுக்கு வழக்கின் விவரம், விசாரணைக்கு வரும் தேதி மற்றும் தீர்ப்பு விவரம் ஆகியவை வாட்ஸ்-அப் எண் 87676- 87676 மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த சூழ்நிலையில் இந்த புதிய இணையதளமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருவது மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com