காஷ்மீர் வைஷ்ணவிதேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலி

காஷ்மீர் வைஷ்ணவிதேவி கோவிலில் புத்தாண்டு வழிபாட்டில் நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் வைஷ்ணவிதேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலி
Published on

15 ஆயிரம் பக்தர்கள்

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் இருந்து 50 கி.மீ. தொலைவில், தரையில் இருந்து 5,200 அடி உயரத்தில் திரிகூட மலையில் அமைந்துள்ள இந்த மலைக்கோவில், சக்தி வழிபாட்டுக்கு ஏற்றதொரு புனிதத்தலம். இந்த தலத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் யாத்திரையாக வந்து வழிபடுவதுவழக்கம்.

இங்கு கொரோனா பரவலுக்கு மத்தியிலும், இது பண்டிகைக்காலம் என்பதால் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வந்து வழிபட காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

புத்தாண்டு வழிபாடு

ஆங்கில புத்தாண்டுநன்னாளையொட்டி,வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் இரவில் இருந்து பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கு வந்து குவிந்தனர்.

கொட்டும் பனிக்கு மத்தியிலும் மக்கள் பக்திப்பரவசத்தில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.

கூட்ட நெரிசல்

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கோவில் கருவறைக்கு வெளியே 3-வது கேட் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முன்னே செல்ல முற்பட்டனர்.

அப்போது இளைஞர்கள் சிலரிடையே சிறிய அளவில் கைகலப்பு ஏற்படவே பெரும் பதற்றம் உருவானது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முற்பட்டு பலர் கீழே விழுந்தனர். ஆண்கள், பெண்கள் என கீழே விழுந்த பக்தர்கள் மீது பலரும் ஏறிச்சென்றனர். ஓரமாக தரையில் படுத்திருந்தவர்கள் மீதும் கூட்டத்தினர் ஏறிச்சென்றதில் அவர்கள் நசுங்கினர். இதனால் அங்கு பெரும் ஓலமும், கூச்சலும் கேட்டது. குழப்பமும் நிலவியது.

12 பேர் பலி

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. பலியானவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி, கத்ரா அடிவார முகாமில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மாதா வைஷ்ணவி தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் 2 பேரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 பேர் அடையாளம் தெரிந்தது

பலியான 12 பேரில் 8 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அருண் பிரதாப்சிங் (வயது 30), தரம்வீர் சிங் (35), வினீத் குமார் (38), ஷாம்தா சிங் (35), டெல்லியைச் சேர்ந்த வினய்குமார் (24), சோனு பாண்டே (24), அரியானாவை சேர்ந்த மம்தா (38), காஷ்மீரை சேர்ந்த தேஸ்ராஜ் குமார் (26) ஆவார்கள்.

பிரதமர் விசாரித்தார்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்காவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். நடந்த சம்பவம் பற்றி அவர் விசாரித்து அறிந்தார்.

சம்பவம் பற்றி உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கவர்னர் மனோஜ் சின்கா குறிப்பிடுகையில், இன்றைய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் அனுதாபம்

வைஷ்ணவி தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா ஆகியோர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரூ.12 லட்சம் இழப்பீடு

வைஷ்ணவி தேவி கோவில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதே போன்று யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார்.

இருப்பினும் புத்தாண்டு தினத்தில் வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்கள் 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com