

சண்டிகர்,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில், முதல்-மந்திரியாக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் பதவி விலகினார். அதைத் தெடர்ந்து, பஞ்சாபின் முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றுக்கொண்டார். சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சரண்ஜீத் சிங்கிற்கு கவர்னர் பன்வாரிலால் புரேகித், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னிக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பஞ்சாப் அரசுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னி மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கருப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.