வரதட்சணை கொடுமை: புதுப்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன் குடும்பத்தினர்

4 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் வரதட்சணையாக ஸ்வப்னாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை: புதுப்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன் குடும்பத்தினர்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்வப்னா (வயது 22). இவருக்கும் அதே மாவட்டத்தின் கோட்வா கிராமத்தை சேர்ந்த நரேந்திர சவுகான் என்பவருக்கும் கடந்த மாதம் 2ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது நரேந்திர சவுகானின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் வரதட்சணையாக ஸ்வப்னாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, திருமணத்திற்குப்பின் புதுப்பெண் ஸ்வப்னா தனது கணவர் நரேந்திர சவுகானுடன் கோட்வா கிராமத்தில் வாழ்ந்துள்ளார். அதேவேளை, ஸ்வப்னாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு நரேந்திர சவுகானும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்துள்ளனர். புல்லெட் பைக், கூடுதலாக 3 லட்ச ரூபாய் வரதட்சணையாக தரவேண்டுமென ஸ்வப்னாவிடம் நரேந்திர சவுகானும் அவரது சகோதரி தேவி, அண்ணிகள் பூஜா தேவி, ரீனா தேவி என குடும்பத்தினர் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்த நரேந்திர சவுகான் மற்றும் குடும்பத்தினர் நேற்று ஸ்வப்னாவை கொலை செய்தனர். ஸ்வப்னாவின் கழுத்தை நெரித்து குடும்பத்தினர் கொலை செய்தனர். பின்னர், கொலையை தற்கொலையாக திசைதிருப்ப நினைத்து ஸ்வப்னாவின் உடலை வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

மேலும், ஸ்வப்னா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிராமத்தினரிடம் நாடகமாடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்வப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் ஸ்வப்னாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஸ்வப்னாவை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய நரேந்திர சவுகானின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். சவுகான் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com