

பெங்களூரு,
ஹாசனில் மர்மமான முறையில் மாயமான புதுப்பெண்ணின் உடல், 8 நாட்களுக்கு பிறகு கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும், பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 19-ந் தேதி இரவு சிக்கநாயக்கனஹள்ளி அருகே உள்ள ஹேமாவதி கால்வாய் பகுதிக்கு கணவன்-மனைவி இருவரும் சென்றனர்.
அப்போது பிரியங்கா திடீரென கணவரின் கண் எதிரிலேயே கால்வாயில் குதித்து மாயமானதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கால்வாயில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் பலத்த நீர்வரத்து காரணமாக உடலை உடனே கண்டறிய முடியவில்லை. இதற்கிடையே, தனது மகளை அவளது கணவர் ராஜசேகர்தான் திட்டமிட்டு கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டதாக பிரியங்காவின் பெற்றோர் போலீசாரிடம் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த ராஜசேகரின் பெற்றோர், பிரியங்காவுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்றும், அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்த உண்மையை மறைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வந்தது.
இந்த நிலையில், ஹேமாவதி கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, நேற்று சரவணபெலகோலா அருகே கால்வாயில் பிரியங்காவின் உடல் மிதப்பது தெரியவந்தது. தொடர்ந்து 8 நாட்களாக நடைபெற்ற தீவிர தேடுதலுக்கு பின் அவரது உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.