'நியூஸ்கிளிக்' விவகாரம்: காங்கிரஸ் மீது மத்திய மந்திரி தாக்கு

நியூஸ்கிளிக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி அனுராக் தாகூர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
'நியூஸ்கிளிக்' விவகாரம்: காங்கிரஸ் மீது மத்திய மந்திரி தாக்கு
Published on

புதுடெல்லி,

நியூஸ்கிளிக் எனப்படும் செய்தி நிறுவனம் சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று வருவதாகவும், அந்த பணம் இந்தியாவில் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நியூஸ்கிளிக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது மத்திய மந்திரி அனுராக் தாகூர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நியூஸ்கிளிக் நிறுவனம் நெவில்லி ராய் சிங்கம் என்ற வெளிநாட்டவர் மற்றும் சீன நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்று வருவது தெரியவருகிறது. நெவில்லி ராய் சிங்கத்துக்கு சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சீன ஊடக நிறுவனமான மாகு குழுமத்துடன் தொடர்பு உள்ளது' என குற்றம் சாட்டினார்.

நியூஸ்கிளிக் நிறுவனம் இலவச செய்தி என்ற பெயரில் பொய் செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டிய தாகூர், காங்கிரசும் பிற கட்சிகளும் இந்த நிறுவனத்தை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தியின் அன்புக்கடையில் சீன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறை கூறினார்.

முன்னதாக நியூஸ்கிளிக் நிறுவனத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதாக மக்களவையில் நேற்று பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபேவும் குற்றம் சாட்டினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com