

கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கராக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரியின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-
“மேற்கு வங்கம் ஒரு சுதந்திரப் போராட்ட பூமி. சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் நாடு தலைநிமிர்ந்து நிற்பதைக் காண விரும்பினர். இந்த நிலத்தில் புதிய சிந்தனைகள் தோன்றின. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பே கராக்பூர் ஐ.ஐ.டி. நிறுவப்பட்டது. அதன் மாணவர்கள் தேசத்தைக் கட்டமைப்பதில் ஒரு முன்னோடிப் பங்கை ஆற்றியுள்ளனர்.
சவால்களை எதிர்கொள்ளாவிட்டால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. மக்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தாங்களே வரம்புகளை விதித்துக் கொள்கிறார்கள். வரம்புகளை உடைக்கும்போதுதான் நமது திறன்களை நம்மால் கண்டறிய முடியும். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா இதை நிரூபித்துள்ளது.
முன்பு, மக்கள் வறுமையை ஒழிப்பதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் எதையும் செய்ய மாட்டார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு, வறுமை ஒரு வெல்ல முடியாத சவாலாக கருதப்பட்டது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், அதை சமாளிப்பதற்கான அரசியல் உறுதியைக் காட்டத் தவறிவிட்டன.
நான் டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில், நாடு முழுவதும் கழிப்பறைகளைக் கட்டுவேன் என்று அறிவித்தபோது, நாடாளுமன்றத்தில் சிலர் அந்த யோசனையைக் கேலி செய்தனர். ஏழைத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் கழிப்பறை வசதி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இது, நமது நாடு நீண்டகாலத் தடைகளை உடைத்தெறிந்ததற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். இது ஒரு சிறிய சாதனை அல்ல. வரம்புகளை உடைப்பதில் நம்பிக்கை கொண்ட நமது மனப்பான்மையின் விளைவாகும்.
ஒரு காலத்தில் கடினமானவை அல்லது சாத்தியமற்றவை எனக் கருதப்பட்ட முயற்சிகள் இப்போது நிஜமாகி வருகின்றன. இதற்கு இந்தியாவின் செமிகண்டக்டர் மற்றும் விண்வெளித் துறைகள் உதாரணங்களாகும். 'தேசம் முதலில்'(Nation First) என்ற மந்திரத்தை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு, அவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா மாட்டு வண்டிகளின் காலத்தில் இருந்து புல்லட் ரெயில்களின் காலத்திற்கும், தபால் கடிதங்களில் இருந்து சமூக ஊடக செய்திகளுக்கும் பயணித்துள்ளது. செமிகண்டக்டர் சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் ஒருநாள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.