பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்


பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
x

Photo Credit: PTI

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படாத பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கட்டாயம் ஒட்டியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் 'பாஸ்டேக்' எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.இதன்மூலம் சில நொடிகளில் சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகின்றன.

இந்த 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும். ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் தனியாக தங்கள் கைவசம் வாகனங்களில் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள், பல நேரங்களில் கட்டணத்தை செலுத்தாமல் சுங்கச்சாவடியின் மாற்று பாதைகள் வழியாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

சுங்கச்சாவடி பணியாளர்களிடம் சிக்கும்போது, வாகனங்களில் தாங்கள் கைவசம் வைத்திருக்கும் ஸ்டிக்கரை காண்பித்து சுங்க கட்டணத்தை செலுத்துகின்றனர். இதன்காரணமாக, வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படாத பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை ஆணையம் உருவாக்கி உள்ளது. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உடனுக்குடன் புகார் அளிக்க ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இந்த புகார் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை நிரந்தர தடுப்பு பட்டியலில் கொண்டுவந்து

அதுபோன்ற வாகனங்கள் முகப்பு கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.இந்த நடவடிக்கை சுங்கச்சாவடிகளில் தடையற்ற பயணத்துக்கு மேலும் உதவியாக இருக்கும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story