

புதுடெல்லி
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பதிவு செய்த வழக்கு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேருக்கு என்.ஐ.ஏ. கோர்ட்டு தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வன்முறையை பரப்பிடும் வகையிலான பெரும் போரை தொடுக்க, இந்தியாவில் இருந்து இளைஞர்களை ஈர்த்து, பணியில் அமர்த்தி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான சதி திட்டங்களை வகுக்கும் வேலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் ஈடுபட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பு கடந்த 2021-ம் ஆண்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
ஈராக் மற்றும் சிரியாவுடன் தொடர்புடைய இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அந்த 4 பேரும் 5 ஆண்டுகளாக காவலில் உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது, என்.ஐ.ஏ. கோர்ட்டு அவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது.
அவர்கள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, சிறப்பு என்.ஐ.ஏ. நீதிபதி விகாஸ் துல் அளித்த தீர்ப்பில், உமர் நிசார் என்ற காசிம் குரசானி, ரமீஸ் அகமது லோனே மற்றும் தன்வீர் அகமது பட் ஆகிய 3 பேருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதவிர உபா சட்டத்தின் கீழ் உமர் நிசாருக்கு மற்றொரு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அப்ஷான் பர்வைஜ் ஜராபிக்கு உபா சட்டத்தின்படி, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்று குற்றவாளிகளான நிசாருக்கு ரூ.36 ஆயிரம், ரமீஸ் அகமதுவுக்கு ரூ.31 ஆயிரம், தன்வீர் அகமதுவுக்கு ரூ.23 ஆயிரம் மற்றும் அப்ஷானுக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.