

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை குறைய தொடங்கியுள்ளது. இந்த அலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் அதிகபட்சமாக 5 நாட்களில் குணம் அடைகிறார்கள்.
அதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31-ந் தேதி(இன்று) முதல் தளர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு இன்று(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
உணவகங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருமண நிகழ்வில் மட்டும் அதிகபட்சமாக 300 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக, மத, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவில்லை.
பஸ்கள், மெட்ரோ ரெயில்களில் இருக்கைகளை முழுமையாக பயன்படுத்தலாம். ஆனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் கொரோனா பரவல் மேலும் குறைந்தால் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளன.
வருகிற 15-ந் தேதிக்குள் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் ரத்து செய்யப்படும். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கினாலும், பல தனியார் பள்ளிகள் இன்று பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகே வகுப்புகளை தொடங்க தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை நடத்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதனால் இன்று முதல் மீண்டும் பள்ளிக்கு செல்லாம் என்று எதிர்பாத்து காத்திருந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.